உயிரே என்னுயிரே என் உடல் ஜனித்த முத்தே இதழ்கள் பறந்தலையும் சிறுகாற்றில் நிர்மால்யத்துகள் பெய்த இளவேனிற்காலப் பெருமழையின் ஒற்றைத் துளி முளைத்த வித்து நீ, என்னுயிரே! நான், உன் ஆதித்தாய்! செவ்வரியோடும் எம் உள்ளங்கை இரேகைகளில் ஆற்றுப்படும் உன்னுலகின் தாவர சங்கமம் நான் உன் சிறு வாழ்வின் படகை பெருங்கடலின் முகப்புக்குப் பண்படுத்திய மீகாமன் என் கார்மேக விழிகளில் உனக்காய் சூலிருக்கும் சிறுதுளிகள் என் மோனத்தின்னுள்ளுறையும் இருதயப் பிரவாகமொன்று எந்நாளும் சேமிக்கும் உனக்கான அமுதத்தை உன்னுதிரம் பிறந்த உயிர்க்கும் சேர்த்து உணவளிக்கும், என் பச்சையம் என்னுதிரம் பிறந்த செடியே மரமே காடே! என்னுயிரே இலைகள் உதிர்ந்து ஓய்ந்திருக்கும் என் இறுதிக் கிளையுடைத்து இதோ தந்தேனொரு குடில் என்னுயிரே யாருமறியாது முடங்கிக் கிடக்க ஒற்றை மூலையேனும் தருவாயா? என்னுயிரே யாருமறியாது முடங்கிக் கிடக்க ஒற்றை மூலையேனும் தருவாயா? என்னுயிரே!